நேட்டோ(NATO) அமைப்பில் இணைவதற்கான படிவத்தைக் கையளிக்குமிடத்து தமது நாட்டிற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா உத்தரவாதம் வழங்கியுள்ளதாக சுவீடன் தெரிவித்துள்ளது.
சுவீடனும் அதன் அயல் நாடான பின்லாந்தும் நேட்டோவில் இணைவதற்கான விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், அதற்கான விண்ணப்பம் கையளிக்கப்பட்டு அது பரிசீலிக்கப்படும் காலப்பகுதியில் தமது நாடு பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளுமென இருநாடுகளும் அச்சம் கொண்டுள்ளன.
நேட்டோ அங்கத்துவ நாடுகளால், குறித்த நாடுகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படுவதற்கு, சுமார் ஓராண்டு காலமெடுக்கும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. குறித்த காலப்பகுதியிலேயே தமது நாட்டுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவாதம் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ளதாக சுவீடன் வௌிவிவகார அமைச்சர் Ann Linde தெரிவித்துள்ளார்.
பனிப்போரின் போது நேட்டோ அமைப்பில் இணைந்துகொள்வதற்கு சுவீடனும் பின்லாந்தும் பின்னடித்திருந்தன. 2014 ஆம் ஆண்டில் கிரிமியாவை ரஷ்யா அதனுடன் இணைத்துக்கொண்டமை, தற்போது உக்ரைன் மீது மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அடுத்து குறித்த 2 நாடுகளும் அவற்றின் பாதுகாப்பு கொள்கைகளை மீள் தீர்மானத்துக்கு உட்படுத்தியுள்ளன. அதன் விளைவாகவே நேட்டோவில் இணைவது தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.