ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும், 22வது திருத்தம் மாற்றியமைக்கப்படும்

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை வலுப்படுத்துவதற்காக அன்றைய ஜனாதிபதி கோட்டாபயவினால் கொண்டுவரப்பட்ட சரத்துகளை மாற்றுவதற்காகவே அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவே இவ்வாறான சரத்துகள் அமைந்திருப்பதாக பொதுமக்கள் கருதுவதால், அப்போதைய ஜனாதிபதியால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.


எனவே சில குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்னர் அவ்வாறான சரத்துகளை நீக்கி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீள அமுல்படுத்துவதற்கான பிரேரணையை முன்வைக்கப்பட்டது. மேலும், புதிய பிரேரணையானது 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பாற்பட்டதாக அமையும்.

நாட்டில் இடம்பெற்ற போராட்டங்கள் காரணமாக அரசாங்கம், அமைச்சரவை, பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் மாற்றப்பட்டதாகவும், தற்போது நாடு அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டே செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Spread the love