நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(09) அதிகாலை முதல் தடைப்பட்ட மின்சாரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை, ஹட்டன், நுவரெலியா, கொழும்பு, கண்டி, மஹியங்கனை, கொட்டகலை, இரத்மலானை, தெஹிவளை, பலாங்கொடை மற்றும் ஜா-எல உள்ளிட்ட பகுதிகளில் இன்று(09) அதிகாலை முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக மின்சக்தி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்புகொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
போட்டித் தன்மையான விலைமனுவிற்கு மாறாக மின் திட்டங்களை செயற்படுத்த அனுமதிக்கும் வகையில், மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிராக மின் பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்று(08) நள்ளிரவு ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டதாக இன்று(09) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலை அடுத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்திருந்தார்.