இலங்கையில் மக்களின் கொந்தளிப்பினை அடுத்து சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அதே பதவியில் நீடிக்க, ஏனைய அமைச்சர்கள் மட்டும் பதவி விலகத்தீர்மானித்துள்ளனர். எனினும் பிரதமர் பதவி விலகினால் தான் முழு அமைச்சரவையும் விலகியதாக அமையும் என இலங்கை அரசியல் சாசனம் வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மட்டும் தமது பதவியை விலகிக் கொள்வது அரசியமைப்பின் 49இன் பிரகாரம் இது சாத்தியம் இல்லையென சட்டவல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று பிரதமர் மஹிந்தவை சந்திக்கவுள்ளார். நாட்டில் நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துவருகிறது. இந்நிலையில் அமைச்சர்கள் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஏற்கனவே ஜனாபதிபதியை சந்தித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ராஜினாமா கடிதத்தை கையளித்ததாகவும், ஜனாதிபதி அதனை ஏற்க மறுத்திருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. எனினும் பிரதமர் மஹிந்த பதவி விலகவில்லை என அவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதனை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.