‘நரகத்தின் வாசலை’ மூட துர்க்மெனிஸ்தான் முடிவு

மத்திய ஆசியக்கண்டத்திலுள்ள துர்க்மெனிஸ்தானில் பிரபல சுற்றுலா பகுதியான நரகத்தின் வாசலை முற்றிலும் மூடப்போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

துர்க்மெனிஸ்தானின் டார்வேசா என்ற பகுதியில் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வின்போது நிலப்பரப்பில் வட்ட வடிவில் பெரிய பள்ளம் உருவானது. அதில் அதிக அளவில் மீதேன் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மீதேன் வாயு பரவாமல் இருப்பதற்காக 1971 ஆம் ஆண்டு அந்த பள்ளத்தில் தீ வைக்கப்பட்டது. அன்றில் இருந்து தற்போதுவரை அந்த பள்ளத்தில் தொடர்ந்து தீ எரிந்து வருகின்றது. இதனால், அந்த பள்ளத்திற்கு “நரகத்தின் வாசல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பள்ளம் சுற்றுலா தலமாக தற்போது செயற்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த பள்ளத்தை காண வருகை தருகின்றனர். இந்நிலையில், நரகத்தின் வாசல் என்று அழைக்கப்பட்டு அந்தத் தீ எரியும் பள்ளத்தை மூட துர்க்மெனிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வரும் தீயால் அப்பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு குறைந்து வருவதாகவும், இயற்கை எரிவாயு வீணாவதை தடுத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் விதமாக நரகத்தின் வாசலை மூட உள்ளதாகவும் துர்க்மெனிஸ்தான் ஜனாதிபதி குர் மென்குலி பெர்முர்மெடெவ் தெரிவித்தார்.

source from oneindia
Spread the love