முக்கியமான சில அரசியல் நகர்வுகளுக்காகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. அடுத்த வருடம் அதிரடியான சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளன எனவும் தெரியவருகின்றது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இடைநிறுத்தும் விதத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலின் பிரகாரம் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 2022 ஜனவரி 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று சபைக்குத் தலைமை தாங்கி, புதிய கூட்டத்தொடரை ஜனாதிபதியே சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைக்க வேண்டும். அரசமைப்பின் 70(1) உறுப்புரிமைக்கமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
அவ்வாறு நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படும் நாளில் இருந்து. இரண்டு மாதங்களுக்கு மேற்படாத வகையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாக வேண்டும். நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டாலும் அந்தக் காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நிலை பாதுகாக்கப்படும். சபாநாயகரும் தொடர்ந்து செயற்படுவார். நாடாளுமன்றத்தில் ஏற்கனவே செயற்பட்ட தெரிவுக் குழுக்கள் புதிய அமர்வின் ஆரம்பத்தில் மறுசீரமைக்கப்படும். இதன்போது கோப் மற்றும் கோபா உள்ளிட்ட முக்கிய குழுக்களும் கலையும். புதிய அமர்வின்போது புதியவர்கள் பெயரிடப்படவேண்டும்.
கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்கள் மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டு, அரச நிறுவனங்களிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர். இதனால் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோப் குழுவின் தலைவராக சரித ஹேரத்தும், கோபா குழுவின் தலைவராக திஸ்ஸ வித்தாரனவும் செயற்பட்டு வருகின்றனர். இந்த இருவரின் பதவிகளும் மாற்றப்படவுள்ளன. அதற்காகவே நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்படுகின்றது எனவும் கூறப்படுகின்றது. அதேவேளை, 2022 ஜனவரியில் அமைச்சரவையும் மறுசீரமைக்கப்படவுள்ளது.