நாளை, “நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள்” என்ற திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இத்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு ‘கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் வேலைகள்’ கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம்
உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய ‘கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இட்சம் வேலைகள்’ கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் 336 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக 14,021 கிராம அலுவலர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
இவ் வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் தேவைகள் பொதுமக்களாலேயே அடையாளங்காணக்கூடிய செயன்முறையை முழுமையாகப் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை 2022 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தேவையான தயார்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை தெரிவித்து நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையால் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.