நிவாரணம் வழங்கும் வேலைதிட்டத்தில் எந்தவொரு குடும்பத்தையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி பணிப்புரை

நிவாரணம் வழங்கும் வேலைதிட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் எந்தவொரு குடும்பத்தையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக் கொடுப்பதற்காக ஆகக்கூடியது 20 பில்லியன் ரூபாவுக்காயினும் போதுமானளவு நெல்லை கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

நெல் கொள்வனவு செய்வது தொடர்பில் நேற்று (14) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பொறிமுறை ஒன்றினூடாக அதனை குறைந்த வருமானம் பெறுவோருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

குறைந்த வருமானம் பெறும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 10 கிலோகிராம் அரிசி வீதம் இரண்டு மாதங்களுக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின் கீழ் 61,600 மெட்ரிக் தொன் நெல்லை விலைக்கு வாங்குவதற்காக 10,000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு ஏற்கனவே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இந்த வேலைதிட்டத்தின் கீழ் பயனடைவதற்காக 28 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது இந்தக் கலந்துரையாடலின் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கமைய, அவர்கள் அனைவருக்காகவும் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் உத்தரவு வழங்கினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்-

உணவு பாதுகாப்பு வேலைதிட்டத்தின் கீழ் 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசியைப் பெற்றுக் கொடுப்பதற்காக 20 பில்லியன் ரூபா பெறுமதியான நெல் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்கின்றோம். மேலும், உத்தரவாத விலையை வழங்குவதன் மூலம் நெல்லின் விலையை பாதுகாக்கவும் எதிர்பார்கின்றோம்.

இதில் முதல் கட்டம் நெல் கையிருப்புகளை கொள்வனவு செய்வதாகும். இப்பணி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அரிசியை விற்பதற்கு நடவடிக்கை எடுக்க மாட்டாது. வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு அரிசியை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வேலைதிட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக பல அமைச்சுக்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

எனினும், இதற்கென முழு நேரமும் செயற்படுவதற்காக குழு ஒன்று அவசியம். அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழுவை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் தகைமை உடையவர்களுக்கு அரிசியை பகிர்ந்தளிக்கும் வகையில் முறையான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும். நெல் கொள்வனவு தொடர்பில், பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நெல் ஆலை உரிமையாளர்களின் தேவையற்ற அழுத்தங்களுக்கு இடம் அளிக்க முடியாது.

மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கென வழங்கப்படும் இந்த மானியத்திற்கு ‘நிவாரண அரிசி’ (‘சஹன சஹல்’) என்று பெயரிடுவதன் மூலம் அவை மீண்டும் விற்பனை செய்யப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறுதல் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல் என்பன முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வேலை திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மிக திருத்தமாக தரவுகளைப் பெற்றுக்கொள்வது அவசியம். அதற்கமைய, கிராம மட்டத்தில் செயற்பட அரச அதிகாரிகள் முன்வராவிட்டால் ஒப்பந்த அடிப்படையில் குழுவொன்றை நியமித்தாயினும் தரவுகள் சேகரிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பை இதற்காக பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்த வேலைதிட்டத்தை முடிவு செய்வதற்கு திட்டமிட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Spread the love