ரஷ்யா அதிபர் புடின் தலைமையில் அணு ஆயுத பயிற்சியை தாம் நடாத்த திட்டமிட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா எல்லையில் லட்சக்கணக்கான போர் வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், போர் மூளும் சூழல் உருவாகும் என உலக நாடுகள் ஆரூடம் கூறியிருந்ததுடன் அச்சத்திலும் இருக்கின்றன.
உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதிலிருந்து இரு நாடுகளுக்கும் 2014 முதற்கொண்டே எல்லை பிரச்னை ஆரம்பமாகியது. தற்போது நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர விருப்பம் தெரிவித்திருந்தது . இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதால் ரஷ்யா கோபமடைந்துள்ளது. இவ்வேளையில், உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது ரஷ்யா. இவ்வேளை இதனைக் கண்ணுற்ற உக்ரைனும் படையைக் குவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் இரு நாட்டுப் படைகளும் எல்லையில் குறைந்த அளவு படைகளைத் திரும்பப் பெற்றது. சிறிது நாட்களின் பின், மீண்டும் இரு நாட்டுப் படைகளும் எல்லையில் வீரர்களைக் குவித்தன.
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களமிறங்கியது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இதனால் ஐரோப்பாவுக்கு பாதிப்பு என்று அமெரிக்கா தெரிவித்தது. இந்த பேச்சுக்கிடையில் குறைந்த அளவிலான படைகளைத் திரும்பப் பெற்றது ரஷ்யா. ஒரு லட்சத்துக்கு அதிகமான படைகள் இன்னும் உக்ரைன் கிரிமியா பகுதியில் இருப்பதால், அமெரிக்கா ரஷ்யாவை தொடர்ந்து எச்சரித்துவருகிறது.
இவ்வேளை, ரஷ்யா தனது அணு ஆயுத பலத்தை காட்டும் வகையில் இன்று பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக ரஷ்யா கூறி உள்ளது. இந்த பயிற்சியில் அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிவிரைவு ஏவுகணைகள், நவீன போர் ஆயுதங்கள் போன்ற உலக அழிவுப்பயங்கர ஆயுதங்கள் ஈடுபடுத்தப்பட இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. இப்பயிற்சியை ரஷ்ய அதிபர் புடின் நேரில் பார்வையிட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்த 2014ல் உக்ரைனிடமிருந்து கைப்பற்றிய கிரிமியன் பகுதியிலும், கருங்கடலிலும் ரஷ்ய போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. போர் சூழலுக்கு மத்தியில் இதுபோன்ற அணு ஆயுத பயிற்சியை ரஷ்யா நடத்துவது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசுகையில், “அமெரிக்கா மற்றும் நமது நட்பு நாடுகள் அனைத்தும் நேட்டோ நாடுகளை ஒவ்வோர் அங்குலமாக அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கத் தயாராக உள்ளன. நாங்கள் உக்ரைனில் சண்டையிட, படைகளை அனுப்ப மாட்டோம். ஆனால் உக்ரேனிய மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்” எனக் கூறினார்.