வடமாகாணத்தின் சம்பிரதாயக் கைத்தொழிலான பனைக் கைத்தொழிலை வர்த்தக மட்டத்திற்கு மேம்படுத்துவதற்காக பனை அபிவிருத்திச் சபை மற்றும் பனை ஆராய்ச்சி நிலையம் ஆகியன இணைந்து பல நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
பனை அபிவிருத்திச் சபையினால் யாழ்ப்பாணத்தில் பனை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதியைத் திறந்துவைக்கும் நிகழ்வு, மீன்பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மற்றும் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆகியோரின் பங்குபற்றலுடன் பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரனவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
பனை உற்பத்தி மற்றும் பனை சார்ந்த மதுபானத் தயாரிப்புக் கைத்தொழில் ஆகியவற்றை தரமுயர்த்துவதற்கு அவசியமான ஆய்வுகளை விரைவாக மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அதற்கு மேலதிகமாக, பனைக் கைத்தொழிலின் முன்னேற்றத்தினால் ஏற்படும் பொருளாதாரப் பிரதிபலிப்பை, இக்கைத்தொழிலில் ஈடுபடும் 12000இற்கும் அதிகமானவர்களின் பிள்ளைகளுக்கு, பனை அபிவிருத்திச் சபைக்கு ஊடாக கல்விப் புலமைப் பரிசிலை வழங்கவேண்டியதன் அவசியத்தை அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
மேலும் உரையாற்றிய பெருந்தோட்டத் துறை மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன: ‘நாம் அனைவரும் ஒரு நாட்டில் வாழும் சகோதரர்கள். நமக்கு வடக்கு, தெற்கு என்று வேறுபாடு இல்லை. அதனால் நாம் அரசாங்கமாக, வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்வது எமது கடமையாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்.
அத்துடன் இந்நிகழ்வில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள், யாழ்ப்பாண மாவட்ட செயலக அதிகாரிகள், பனை அபிவிருத்திச் சபையின் மற்றும் பனை ஆராய்ச்சி நிலையம் என்பவற்றின் தலைவர்கள், ஊழியர்கள் உட்பட, வடமாகாண அரசியல்வாதிகள் என பலரும் பங்குபற்றிச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.