பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று முன்தினம் சந்தித்துப்பேசினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, இலங்கையை பிராந்தியத்தின் கல்விக் கேந்திரமையமாக மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தபோது அவரிடம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் பிறநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொருத்தமான பாடநெறிகளின் ஆரம்ப கட்டத்தை இலங்கையில் தொடர்வதற்குத் தேவையான கல்வி நிறுவனங்களை இலங்கையில் நிறுவுவதன் மூலம் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக திருமதி அன்ட்ரூஸ் சுட்டிக்காட்டினார்.