அரசாங்கத்தின் மின் வழங்கல் மற்றும் மின்துண்டிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும், கல்விப் பொதுத் தராதர உயர்தர இறுதிக்கட்ட பரீட்சைக்கு கூட சீராக மின்சாரம் வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளமை, மக்கள் விரோத அரசாங்கம் என்பதை காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முழு மூச்சாக இருக்கின்றதே தவிர, மக்களின் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லாத அரசாங்கமாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்றுவரை பெருமளவில் மின்சாரக்கட்டணத்தை மின்சக்தி அமைச்சு அதிகரித்துள்ளது, ஆனால் மின்சாரப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை, இது அமைச்சரின் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கான செயல் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் 3 இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி அரசாங்கம் அக்கறை கொள்வதாக இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் குறித்த செயல்பாடுகளின் மூலம், மின்சக்தியை விற்கும் அரசாங்கத்தின் மறைமுக திட்டம் தெளிவாகத் தெரிவதாக அவர் மேலும் சாடியுள்ளார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பின் மூலம் மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம், தற்போது பரீட்சைக் காலங்களிலும் மின்சாரத்தை துண்டிப்பது மாணவர்களின் கல்வியையும், எதிர்காலத்தையும் பாதிப்பதாக அமைவதாக சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கம் மின்சாரத்துண்டிப்பு தொடர்பிலான தீர்மானத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும் எனவும் அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.