பலாலிக்கு விமானங்களை அனுப்ப இந்தியா மறுக்கிறதா?-இந்தியாவுடன் பேசி ஒரு விமானத்தையாவது  கொண்டுவருமாறு அரசு சவால்

முடிந்தால் இந்தியாவுடன் பேசி பலாலி விமான நிலையத்திற்கு ஒரு விமானத்தையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு விமானத்தை கொண்டு வந்தால் அங்கிருந்து விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கின்றோம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சிவில் விமான சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை தொலைக்காட்சி சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணம் விமான நிலையத் திற்காக பெருமளவான நிதி செல வழிக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதற்காக அதனை திறந்து வைத்தோம். யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர்களையே நியமித்தோம். விரைவில் திறக்குமாறும், விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதாகவும் பல்வேறு நிறுவனங்கள் உறுதியளித்தன.

ஆனால் கடந்த காலங்களில் எவரும் விமானத்தை கொண்டு வரவில்லை. விமானங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியுமென்றால் முதலில் விமானங்களை கொண்டு வாருங்கள். அதற்கு பின்னர் தேவையான வேலைகளை நாங்கள் செய்கின்றோம் என்றார். இதன்போது எழுந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறீதரன் எம்.பி கூறுகையில், இந்தியாவின், இந்தியன் எயார் வேஸ் நிறுவனம் மற்றும் இந்தியா என்பன விமானத்தை கொண்டுவர தயாராகவே இருக்கின்றன. இதனால் யாரும் விமானத்தை கொண்டு வரவில்லை என்று கூற வேண்டாம். இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது என்றார். மீண்டும் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில், விமானம் வரும் என்று நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். பல்வேறு செய்திகளையும் அனுப்பினோம். ஆனால் வரவில்லை . பிரச்சினைகள் இருந்தால் பேசி தீர்த்துக்கொள்ளலாம். உண்மையிலேயே விமானங்களை கொண்டு வர முடியுமென்று உறுதிப்படுத்தினால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார்.

Spread the love