பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கடுப்பில் அரச தரப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரான அஜித் ராஜபக்ச 109 வாக்குளைப்பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பிரதான எதிர்க்கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரான ரோஹினி குமாரி கவிரத்ன 78 வாக்குளைப்பெற்று தோல்வியடைந்த நிலையில் 23 வாக்குகள் செல்லு படியற்றதானதுடன் 13 எம்.பி.க்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு கூடிய நிலையில் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான தமது வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ராஹிேனி குமாரி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதச முன்மொழிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்தார் . இந்நிலையில் அரச தரப்பில் அமைச்சரான ஜீ.எல். பீரிஸ் எழுந்து அஜித் ராஜபக்சவின் பெயரை தமது வேட்பாளராக அறிவிக்க சமன் பிரியந்த ஹேரத் எம்.பி. வழிமொழிந்தார். இதனையடுத்தே சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டதுடன் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் பிரதி சபாநாயகர் தெரிவுக்கு வாக்கெடுப்பு தேவையில்லை, ஏக மனதாக ஒருவரை தெரிவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய போதும் அதற்கு அரச தரப்பு உடன்படாததால் இந்த வாக்களிப்பில் தமது வாக்குகளை செல்லுபடியற்றதாக்குவோம் என எதிர்க்கட்சி பக்கத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள் அறிவித்த நிலையில் முற்பகல் 10.30 மணிக்கு இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.
11.15 மணியளவில் வாக்களிப்பு நிறைவு பியூரிற் நிலையில் வாக்கு என்னும் பணிகள் 11.45 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அரச தரப்பு பிரதி சபாநாயகர் வேட்பாளரான அஜித் ராஜபக்ச 109 வாக்குகளையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரோஹிணி குமாரி கவிரத்ன 78 வாக்குளையும் பெற்ற நிலையில் 31 மேலதிக வாக்குளைப்பெற்ற அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். இந்த இரகசிய வாக்களிப்பில் 23 வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக அமைந்ததுடன், 13எம்.பிக்கள் வாக்கெடுப்பின் போது சமுகமளித்திருக்கவில்லை.