ஐ.பி.எல். 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் பெங்களூரு மாநகரில் நடைபெற உள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை, சென்னை உள்ளிட்ட பழைய 8 அணிகளும் லக்னோ , அகமதாபாத் உள்ளிட்ட புதிய 2 அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தேர்வு செய்து அவர்களின் பெயர் மற்றும் சம்பளம் உள்ளிட்ட முழு விபரங்களையும் வெளியிட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ஐ.பி.எல். 2022 தொடரில் பங்கேற்கும் அணிகளில் விளையாடப்போகும் எஞ்சிய வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலத்தில் உலகம் முழுவதிலிருந்து மொத்தம் 1214 வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளார்கள். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் தற்போது முதலே ஐ.பி.எல். இரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
டேவிட் வார்னர் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் இந்த ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க உள்ள நிலையில் சில முக்கிய வீரர்கள் காயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்கள். கடந்த 2008 முதல் இது வரை தொடர்ந்து இரசிகர்களை மகிழ்வித்து வந்த கிறிஸ் கெயில் ஐ.பி.எல். தொடரில் இருந்து விடைபெற்றுள்ளார். இது ஐ.பி. எல். ரசிகர்களை சோகம் அடைய செய்துள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐ.பி.எல். 2022 தொடரில் பங்கேற்கும் எண்ணம் இருப்பதாக சமீபத்திய ஆஷஸ் தொடரின் போது தெரிவித்திருந்தார். குறிப்பாக வரும் ஒக்ரோபர் மாதம் தங்களது சொந்த மண்ணில் ஐ.சி.சி. ரி20 உலகக்கோப்பை 2022 தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு தயாராகும் வண்ணம் ஐ.பி.எல். தொடரில் விளையாட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஐ.பி.எல். தொடரின் மெகா ஏலத்தில் அவரின் பெயர் இடம் பெறாததால் ஐ.பி.எல். 2022 தொடரில் அவர் பங்கேற்காதது உறுதியாகியுள்ளது. ஸ்டார்க் போலவே இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் மற்றும் கப்டன் ஜோ ரூட் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க இருப்பதாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக ஐ.பி.எல். தொடரில் விளையாடும் முயற்சியை தியாகம் செய்வதாக ஜோ ரூட் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்துள்ளார்.