எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன, சேதன உரங்களை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெரும்போகத்தில் 800,000 ஹெக்ரெயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கு தேவையான உரங்களை வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக்கம்பனி ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 06.06.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
2022/23 பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான இரசாயன மற்றும் சேதன உரங்களுக்கான பெறுகைக் கோரல்
2022/23 பெரும்போகத்தில் 800,000 ஹெக்ரெயார் நெற்செய்கைக்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்குத் தேவையான உரத்தை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 2022/23 பெரும்போக நெற் செய்கைக்கு 150,000 மெட்ரிக்தொன் யூரியா உரம், 45,000 மெட்ரிக்தொன் மியுரேட் ஒஃப் பொஸ்பேற் (MOP) உம், 36,000 மெட்ரிக்தொன் ட்ரிபல் சுப்பர் பொஸ்பேற் (TSP) உம் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த உரத்தொகையை வரையறுக்கப்பட்ட லங்கா உரக்கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக் கம்பனி ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.