நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக தொழில் உற்பத்தித் துறையை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்கவும், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், நிலையான மின் கட்டணத்தைப் பேணுவது தொடர்பிலும் தேசிய சபையின் உபகுழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்களை இனங்காண்பது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், மின்சார தேவை தொடர்பில் அதிக கேள்வி காணப்படும் நேரத்திற்கும், குறைந்த கேள்வி காணப்படும் நேரத்திற்கும் இடையில் அமைகின்ற இடைவெளியைக் குறைக்க வேண்டும் என உபகுழுவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. நாட்டின் வலுசக்தி தேவையை பூர்த்திசெய்துகொள்ள மாற்று வலுசக்தி மூலங்களை பயன்படுத்துவது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் ஆலோசனைகளும் நடத்தப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து துறையை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 87 ஒக்டேன் ரக எரிபொருளை பயன்படுத்துவது தொடர்பிலும் தேசிய சபையின் உபக்குழுவில் ஆராயப்பட்டுள்ளது.
தற்பொழுது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும்போது மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையை மிகவும் வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் யோசனைகளையும் தேசிய பேரவைக்கு முன்வைப்பதாகவும் அதனையடுத்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற முடியும் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சு, திறைசேரி, தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம், பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை புகையிரதத் திணைக்களம், இலங்கை போக்குவரத்துச் சபை உள்ளிட்ட பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன மற்றும் எம்.ராமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.