பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சி, இந்தியா இனியும் உதவாது- பிரதமர்

மீள முடியாத வகையில் நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவரை கடன் உதவி செய்த இந்தியா, மேலும் உதவும் என எதிர்பார்க்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால், இலங்கை தற்போது மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்கொண்டுள்ளது என்றும் கூறினார். இலங்கையின் பொருளாதாரம் பூரண வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள தாகவும், இதுவே தற்போது நாடு எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை எனவும் பிரதமர் குறிப்பிட்டார். அந்நிய செலாவணி பிரச்சினையை முதலில் தீர்க்கவேண்டும் என்றும் குறிப்பாக 4 பில்லியன் டொலர் ஏற்கெனவே பெற்றுக்கொண்டுள்ள போதும் இந்தியாவிடம் இருந்து புதிய உதவியைக் கோரியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதே நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பான வழி என பிரதமர் குறிப்பிட்டார். மத்திய வங்கி, திறைசேரி, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றும் இலங்கைக்கு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். 

Spread the love