அவுஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு நுட்ப பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரும், முன்நாள் ஒரு நாள் சர்வதேச போட்டி மற்றும் 20-20 போட்டிகளது தலைவருமான லசித் மாலிங்க இலங்கை கிரிக்கெட்டினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், குறுகிய கால பதவியாக இந்த பதவி வழங்கப்பட்டுளளதாகவும், சிறப்பு பயிற்றுவிப்பாளராகவும், போட்டிக்கான நுட்பங்களை வழங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது அனுபவம் குறிப்பாக இறுதி நேர ஓவர்களில் பந்துவீசுவது தொடர்பாக நுட்பங்களை இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு அவர் வழங்குவார் எனவும் இலங்கை கிரிக்கெட்டது நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பான இளைய வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணியில் காணப்படுகின்றனர். அவர்களுக்கு பயிற்சியளிப்பது மகிழ்ச்சி என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா தொடருக்கான இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் உள்ள அவர் தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததும் அவுஸ்திரேலியாவுக்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் லசித் மாலிங்க அணிக்குள் இணைவது இலங்கை அணிக்கு பலமாக அமையும்.
இலங்கை அணி 5 டுவென்டி டுவென்டி போட்டிகள் அடங்கிய தொடரில் அவுஸ்திரேலியா அணியுடன் விளையாடவுள்ள இலங்கை அணி அதன் பின்னர் இந்தியாவுக்கு செல்லவுள்ளது. லசித் மாலிங்க அவுஸ்திரேலியா தொடருக்கு மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளார்.