மிகை வரிச் சட்டமூலத்தை எதிர்த்து விசேட மனு.. உயர்நீதிமன்றத்தில் தாக்கல்..

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மிகை வரிச் சட்டமூலத்தை அரசியலமைப்புக்கு முரணானது என தீர்மானித்து உத்தரவிடுமாறு கோரி  ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் விசேட பிரகடன மனுவொன்று, நேற்று (23) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தின் 2/3 அனுமதியைப் பெற்று மேலதிகமாக மக்கள் வாக்கெடுப்புக்கு விட்டு அதன் மூலம் மக்களின் அனுமதியைப் பெற வேண்டும் என பிரகடனப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த மனுவின் மூலம் விண்ணப்பம் கோரியுள்ளார்.

“மிகைவரி” என்ற தலைப்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் நேற்று முன்தினம் (22) சேர்க்கப்பட்டது, 

 சட்டமூலத்தின் சரத்து 2(1)ன் படி, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் ரூ.2000 மில்லியனுக்கு அதிக வருட வருமானம் பெறும் கூட்டு வர்த்தகம் அல்லது நிறுவனம், அரச அங்கீகாரம் பெற்ற ஏதோ ஒரு நிறுவனம் ,தாம் பெறும் வருமானத்தில் 25 சதவீதத்தை அத்தகைய மதிப்பீட்டு ஆண்டுக்கு வரியாக செலுத்த வேண்டும் என மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 2(1) மற்றும் சட்டமூலத்தின் பிற தற்செயலான ஏற்பாடுகள் பிரிவுகளுடன் வாசிக்கப்பட்டால், மிகை வரிக்கு உட்பட்ட ஒரு நிறுவனத்தின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவும் மதிப்பீட்டு வரிக்குள் உள்ளடக்கப்படும் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த சட்டமூலத்தின் சரத்துகள் அரசியலமைப்பின் 3(1) பிரிவின்படி மக்களின் இறையாண்மையை மீறும் ஒரு சட்ட வரைபு என்றும் மனுதாரர் தனது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Spread the love