மின்வெட்டை தவிர்ப்பதற்கு தேவையான அளவு நீரை விடுவிக்க தீர்மானம் 

நேற்று(30) முதல் மின்வெட்டைத் தவிர்ப்பதற்கு தேவையான அளவு நீரை விடுவிப்பதற்கு மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ பிரிவு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 29/01/2023 மகாவலி அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்றும் (30) இன்றும்(31) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை நடைபெறுகின்ற எதிர்வரும் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொடர்ச்சியான நீர் விநியோகம் தொடர்பாக அதிகார சபை எதிர்வரும் முதலாம் திகதி கலந்துரையாடவுள்ளது. எதிர்வரும் தினங்களில் அதிக மழைவீழ்ச்சியினை எதிர்பார்ப்பதாகவும் இது பரீட்சை காலத்தில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும் எனவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு தெரிவித்துள்ளது.

நீர் மின் நிலையங்களுக்கு மேலதிகமாக, போதியளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான ஏனைய மின்  பிறப்பாக்கிகளை  இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது

Spread the love