ரஷ்யா உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தலாம் : அமெரிக்கா எச்சரிக்கை!

முன்னதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜெகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் கடந்த புதன்கிழமை 9ம்திகதி ரஷ்யாவானது உக்ரைனுக்கு எதிராக இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரித்தது. உக்ரைனானது சட்டவிரோதமான இரசாயன ஆயுதங்களை உருவாக்குவதாக கூறப்படும் ரஷ்யாவின் கூற்றுக்களை வெள்ளை மாளிகை நிராகரித்தது.

இந்த வாரம் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜெகரோவா,  உக்ரைன் தனது பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, “ரஷ்யாவின் கூற்று அபத்தமானது” என்றும் “உக்ரைனுக்கு எதிராக பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தனக்கான அடித்தளத்தை அமைக்கிறது”எனவும் குற்றம் சாட்டினார்.

இது உக்ரைன் மீதான தனது மேலும் திட்டமிடப்பட்ட, நியாயமற்ற தாக்குதலை நியாயப்படுத்த முயற்சிக்கும் ரஷ்யாவின் வெளிப்படையான சூழ்ச்சியாகும்” என்று ஜென் சாகி புதன்கிழமை ட்வீட் செய்தார்.  ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கும் அல்லது அவற்றைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்குவதற்குமான ஒரு சதி முயற்சியே இது என எச்சரித்த அமெரிக்க செய்தித் தொடர்பாளர், ரஷ்யாவினது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் கூறினார்.

முன்னதாக, அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் சிலவற்றை  அறிவித்திருந்தது. அத்துடன்  ரஷ்யாவிலிருந்து அனைத்து வகையான எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோல் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றுத் தெரிவித்தார்.

இதனால், அமெரிக்காவில் எண்ணெய் விலை உயர வழிவகுக்கும் என்றும், அவர் கூறினார். உலக வரலாற்றில் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அதிபர் ஜோ பைடன்  தெரிவித்தார். இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு பாரிய  இழப்பாகவே கருதப்படும்.

Spread the love