மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆட்சியின் வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பலர் அதற்கான அழுத்தங்களை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுத்து வருகின்றனர்.
அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளை கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்பட்டன. எனினும் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் எஞ்சிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி மீண்டும் மறுத்துள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கே அமைச்சுப் பதவிகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலைமையால் ஏனைய அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் மேலும் தாமதமாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வதன் மூலம் ராஜபக்ஷகளுக்கு எதிராக எழுந்துள்ள நெருக்கடிகளை தீர்க்க நாமல் முயற்சி செய்த போதும் அது தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மறுபுறத்தில் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கான தீவிர நடவடிக்கையை பொதுஜன பெரமுன கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு சமகால பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.