ரி20 கிரிக்கெட்டில் 300 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய துடுப்பாட்ட வீரர் ரோகித்சர்மா ஆவார். 298 பவுண்டரிகளுடன் விராட்கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ரி 20 போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 170 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது ரி 20 போட்டியில் இந்தியா 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 31 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். இந்தப் போட்டியில் அவர் அடித்த பவுண்டரிகளால் புதிய சாதனை படைத்துள்ளார். மொத்தம் 301 பவுண்டரிகளை அவர் அடித்துள்ளார். இதனால் ரி20 கிரிக்கெட்டில் 300 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். அவர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி விட்டு (298 பவுண்டரிகள்) இந்த இடத்திற்கு வந்துள்ளார். இந்தப் பட்டியலில் அயர்லாந்து கிரிக்கெட் வீரர் பால் ஸ்டெர்லிங் மொத்தம் 325 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து 2 ஆவது இடத்தில் ரோகித் உள்ளார். விராட்கோலி 3ஆவது இடத்தில் உள்ளார்.