சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுடன் ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற இரு வேறு படகுகள், லிபியாவின் கடற்பிராந்தியத்தில், கடந்த வாரம் கவிழ்ந்ததில் 160 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, சர்வதேச புலம்பெயர்வோர் நல அமைப்பின் (IMO) செய்தித்தொடர்பாளர் சஃபா செஹ்லி நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். குடியேற்றவாசிகளுடன் சென்ற படகொன்று கடந்த வெள்ளிக்கிழமை லிபியக் கடற்பரப்பில் கவிழ்ந்ததில், குறைந்தது 102 பேர் உயிரிழந்ததாக, சஃபா செஹ்லி கூறினார். இந்தப் படகில் இருந்தவர்களில் எட்டுப் பேர் மீட்கப்பட்டு, கரைக்குத் திரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டாவது கப்பல் விபத்து, கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த விபத்தில் இறந்து போன 62 புலம்பெயர்ந்தோரின் சடலங்களை, லிபியக் கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதே நாளில், குறைந்தது 210 புலம்பெயர்ந்தோருடன் சென்றுகொண்டிருந்த படகொன்று, கடலோரக் காவல்படையினரால், இடைமறிக்கப்பட்டு, லிபியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அவர் கூறினார். இதேவேளை, கடந்த வாரம் இருவேறு படகு விபத்துக்களில், உயிரிழந்தவர்களையும் சேர்த்து, மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த ஆண்டு இடம்பெற்ற படகு விபத்துக்களில், உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 1,500 இற்கும் அதிகமென, சர்வதேச புலம்பெயர்வோர் நலஅமைப்பின் (IMO) செய்தித் தொடர்பாளர் சஃபா செஹ்லி தெரிவித்தார்.