‘வற்’ வரிக்கு மேலாக 20 வீத புதிய வரி- அனுரகுமார திஸாநாயக்க


பொருட்கள் சேவைகள் மீது அறவிடப்படும் 15 வீத வரிக்கு (வற்) மேலதிகமாக சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி என்ற பெயரில் புதிய வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதனுடாக சாதாரண பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான வரிகள் 20 வீதமாக அதிகரிக்கும் என்றும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கருத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை கூறியுள்ளார். அதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தச் சட்டமூலம் தொடர்பில் வாக்கெடுப்பு மற்றும் விவாதம் இன்றி நிறைவேற்றுவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் அதில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், அது தொடர்பில் வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் குறித்த விடயம் தொடர்பில் விளக்க நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை . இந்த நெருக்கடி மக்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு, மின்கட்டணம், பஸ்கட்டம். நீர்க் கட்டணம் அதிகரிப்பு என்று மக்கள் பெரும் பிரச்சினைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 8 வீதமாக இருந்த ‘வற்’ வரி 12 வீதமாகவும் பின்னர் 15 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது பொருட்கள், சேவைகளின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந் நிலையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலம் என்று புதிதாக வரிச் சட்டமொன்றை கொண்டு வந்துள்ளனர். இதில் 2.5 வீத செலவீன வரி அறவிடப்படவுள்ளது. இறக்குமதி, விற்பனை என்று வரி அறவிடப் படவுள்ளது. அத்துடன் உற்பத்தில் 2.5 வீதம் வரியும், விநியோகம், விற்பனைக்கும் வரி அறவிடப்படவுள்ளது. இந்த வரிகள் ஒன் றுக்கு ஒன்று தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. இதனால், வற்வரியுடன் சாதாரண பொருட்கள் மற்றும் சேவைகளின் வரிகள் 20 வீதமாக அதிகரிக்கும். ஏற்கனவே மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத நிலைமையிலேயே இருக்கின்றனர். இந்நிலையில் இப்போது அறிமுகப்படுத்தும் வரியும் மீண்டும் மீண்டும் மக்கள் மீது சுமைகளை சுமத்தும் வகையிலேயே அமையும். இது நியாயமாகுமா? சாதாரண மக்கள் மீது சுமைகளை சுமத்தாது புதிய முறைமை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை இந்த நிலைமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது உள்ளது. அவர்களை விட்டுவிட்டு சாதாரண மக்களின் மீது வரிச்சுமைகளை அதிகரித்து தெருக்கடியில் இருந்து மீண்டுவரவே முயற்சிக்கின்றனர். இதனால் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி என்ற பெயரில் மேலும் வரிகளை அறவிட முயற்சிக்கிறனர். இதன் காரணத்தினால் இந்த சட்டமூலத்திற்கு நாங்கள் எதிர்ப்பை வெளியிடுகின்றோம் என்றார்.


Spread the love