நேற்று ஜேர்மனியின் பார்வேரினய் அல்ப்ஸ்’ என்னும் இடத்தில் ஆரம்பமாகிய G7 மாநாட்டில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் அவை பெரும்பாலும் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. G7 நாடுகள் ரஷ்யா மீது தங்கம் மற்றும் வைர தடையினை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றனர்.
ரஷ்யா தற்போது தனது பரிமாற்றங்களை தங்கத்தினூடாகவே மேற்கொள்கின்றது. இதனால் தங்கத்தை ரஷ்யாவில் தடை செய்யவேண்டும் என கனடா, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்படி கோரிக்கையினை முன்வைத்திருக்கின்ற போதிலும், இந்த விடயத்தை அவதானமாக கையாளவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ‘சார்ள்ஸ் மிச்சல்’ தெரிவித்திருக்கின்றார். இந்நிலையில் ரஷ்யாவில் தங்க ஏற்றுமதி, இறக்குமதியாளர்களின் மொத்த வருமானத் தொகை கடந்த ஆண்டு 15.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது உலகில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தடுமாறி வருகின்றன. இந்நிலையில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்த பொருளாதார வீழ்ச்சியை சாதகமாக பயன்படுத்தி வருகின்றது. இதனை முறியடிக்கும் நோக்கில் சுமார் 600 பில்லியன் அமெரிக்க டொலர்கள் G 7 மாநாட்டுத் தலைவர்களினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி நிதியினை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுவதன் மூலம் சீனாவின் தலையீட்டை தடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.