விலை குறைப்பு தொடர்பான மருந்துகளின் பட்டியலை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியதாக குறித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், சுமார் 1,300 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படும்போது, 100 வகையான மருந்துகளுக்கு மட்டுமே விலைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட விலையில் மருந்து சந்தையில் இருக்கும் போது தனியார் துறையில் எஞ்சியிருக்கும் மருந்துகள் 100% முதல் 300%, 600% வரை மிக அநியாய விலை உயர்வுக்கு விற்கப்படுவதைப் பார்க்கிறோம்.
அதன் ஊடாக மக்களுக்கு எவ்வாறு நிவாரணங்களை வழங்குவது என்பது தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் தரப்பிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் என்ற வகையிலும், இந்த நேரத்தில் மக்களுக்கு மருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.