எரிபொருள் பாவனையை குறைக்கும் நோக்கில், பிரதமர் காரியாலயத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தவாறு வேலை செய்யும் திட்டமொன்றை ஏற்படுத்துவதற்கான ஆலோசனையை பிரதமரின் செயலாளருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ முன்வைத்துள்ளார்.
இதற்கமைய, பிரதமரின் செயலகத்திலும் பிரதமரின் கட்டுப்பாட்டிலுள்ள அமைச்சரவைகளிலும் சேவையாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய சேவை தவிர்ந்த, ஏனைய ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே சேவையாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகள், நிபுணர்களுடன் கலந்துரையாடியுள்ளார். நேற்றுமுன்தினம் (30) மாலை அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அரச நிதியில் COVID தொற்று பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இதன்போது, அரச நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி கபில சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
COVID தடுப்பூசிக்காக மாத்திரம் 2021 ஆம் ஆண்டில் 130 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார். பூகோள பொருளாதாரம் இவ்வருடத்தில் ஸ்தம்பிதமடைந்தமை, உக்ரைன் – ரஷ்ய யுத்தம் போன்ற காரணிகளும் இலங்கை பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் பணிப்பாளர், அனில் பெரேரா இதன்போது பிரதமரிடம் தெரிவித்துள்ளார். புதிய வரி கொள்கை அறிமுகம் உள்ளிட்ட பல விடயங்களும் இதன்போது நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.