வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள விரும்பும் அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (01.11.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்ல விரும்பும் அரச ஊழியர்களை பதிவு செய்யுமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தின் ஊடாக அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 15,000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அதில் 273 பேர் இவ்வாறு பதிவு செய்து வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். மேலும் அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல விரும்புகின்றனர்.
ஆனால் அந்தந்த நாடுகளின் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு அரசாங்க ஊழியர்களுக்கு தேவையான தகுதிகளை பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில், இந்த நாட்டில் அரசாங்க வேலைவாய்ப்பிற்குப் பயன்படுத்தப்படும் கல்வித்தகைமை ஏனைய நாடுகளில் வெளிநாட்டு தொழிலாளர் சந்தையில் வேலை வாய்ப்புக்கான தகுதியாக இருக்க முடியாது.
எவ்வாறாயினும், வெளிநாட்டு தொழில் சந்தைக்கு பொருத்தமான வேலைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் தான் விண்ணப்பிக்க விரும்பும் வேலைக்கு விண்ணப்பித்த பின்னர், இது தொடர்பான பிற பணிகள் மேற்கொள்ளப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன வெளிநாட்டு வேலைகளை ஒழுங்குபடுத்தும் நிறுவனம்.
இதனால் ஒவ்வொரு நாட்டினதும் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு அரசாங்க ஊழியர்களுக்கு தேவையான தகுதிகள் உள்ளதா, இல்லை என்றால் அதற்கான தகுதிகளை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும், பணிப் பாதுகாப்பு குறித்தும் அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.