ஜனாதிபதியும் பிரதமரும் பல்வேறு துறைகள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் இன்று தனித்தனியாக ஈடுபட்டிருந்தனர். தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட அதிகாரிகள் ஜனாதிபதியை இன்று சந்தித்து வௌிநாட்டு வேலைவாய்ப்பு விரிவாக்கம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள அல்லது பல்வேறு பணிகளுக்கான திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள ஊழியர்கள் வௌிநாட்டு தொழில்களுக்கு செல்லும்போது ஏற்படும் இடையூறுகளை நீக்கி, துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இதன்போது அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.
ஜப்பான், போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் தொழில் வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மொழி மற்றும் தொழிற்பயிற்சி திட்டங்களை ஆரம்பிக்குமாறு இதன்போது ஜனாதிபதி வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அதிகாரிகளை அழைத்து மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
பிரதமர் இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமித்துள்ள ருவன் விஜேவர்தனவும் இதில் கலந்துகொண்டிருந்தார். கையிருப்பில் உள்ள மருந்துகள் மற்றும் தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் தொடர்பிலான பட்டியலை தமக்கு வழங்குமாறு இதன்போது பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து கிடைக்கும் 200 மில்லியன் டொலரை மருந்துகளுக்காக செலுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் விரைவில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கும் செலவுகளை செய்வதற்கும் ஔடத ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.